உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைகப்பட்டுள்ளன. மேலும், டோக்கியோவில் ஜூலை மாத இறுதியில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த வைரஸை பரவ விடாமல் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. எனவே பொது இடங்களில் அதிகளவிலான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில விளையாட்டுத் தொடர்களும் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இம்மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கொரோனாவால் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அது குறித்த செய்திகளும் தொடர்ந்து சில நாள்களாக வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஐபிஎல் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்படியாக பிசிசிஐ தரப்பில் பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ அலுவலர் ஒருவர், ஐபிஎல் தொடங்க இன்னும் நாள்கள் உள்ளன. இதுவரை அதுதொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்போம் என்றார். முன்னதாக இது குறித்த கேள்விக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை ஐசிசி அணியில் இடம்பிடித்த ஒரே இந்திய வீராங்கனை!