இந்தியா, தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இன்று (மார்ச் 12) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 36 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையையும் அவர் படைத்து அசத்தினார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய மிதாலி ராஜ், "கிரிக்கெட்டில் நீங்கள் வெகு காலம் விளையாடும்போது, ஒவ்வொரு சாதனைகளைப் படைப்பீர்கள். அதில் ஒன்று தான் இதுவும். எனது இந்த சாதனைக்கு நான் நிலைத்தன்மையுடன் விளையாடி வருவதுதான் காரணம். ஏனெனில் நான் ஒவ்வொரு முறை விளையாடக் களமிறங்கும்போதும் நான் ரன்களை சேர்த்து அணி வெற்றிபெற உதவவேண்டும் என்றுதான் சிந்திப்பேன். அது சர்வதேசப் போட்டியாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சரி” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட்: டக்வொர்த் லூயிஸ் முறையில் தென்ஆப்பிரிக்கா வெற்றி!