பொதுவாக, கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பேட்டிங்கில் தங்களுக்கான தனி ஸ்டைல் இருந்தாலும், பந்தை எதிர்கொண்டு பேட்டிங் செய்யும் விதத்தில் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கும். சுருக்கமாக சொல்லபோனால் ஆர்த்தோடக்ஸ் ஷாட்டுகளைதான் விளையாடுவார்கள்.
ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஸ்மித் இதிலிருந்து சற்று மாறுப்பட்டவர். மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் அல்லாமல் வழக்கத்திற்கு மாறான ஸ்டைலில்தான் (அன்ஆர்த்தோடக்ஸ் ஷாட்) ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்கிறார். ஸ்டெம்புகளை மறைத்து விளையாடுவதால் இவரால் போல்ட், எல்.பி.டபள்யூவில் அவுட் ஆவதில் இருந்து தப்பமுடிகிறது.அதேசமயம், அவர் அப்படி செய்வதால் லெக் சைட், ஆஃப் சைட் என இரு பக்கங்களிலும் பந்தை பவுண்ட்ரிக்கு அடிக்கும் வாய்ப்பும் அமைகிறது.
தற்போது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள்தான் அதிகம் காணப்படுகிறது. பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி ஓராண்டுக்குப் பிறகு தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இவரது கம்பேக் பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கிறது.
இரட்டை சதம் விளாசிய ஸ்மித் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தவிக்கின்றனர். முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம், ஒரு அரைசதம் விளாசிய இவர், பவுன்சர் பந்து தாக்கியதால் மூன்றாவது போட்டியில் விளையாடாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து, மான்செஸ்டரில் நடைபெற்றுவரும் போட்டியில் இரட்டை சதம் விளாசி ஆஷஸில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். 319 பந்துகளில் 24 பவுண்ட்ரி, இரண்டு சிக்சர் என 211 ரன்கள் விளாசி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார்.
அதேசமயம், இங்கிலாந்து ஆடுகளத்தில் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறிவரும் போது இவரால் மட்டும் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது என்ற கேள்விக்கான விடையை இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் தந்துள்ளார். இதுகுறித்து அவர், "வித்தியாசமான ஸ்டைலை அவர் நேர்த்தியான முறையில் கையாள்கிறார். அதுதான் அவரை மற்றவரிடம் இருந்து தனித்து காட்டுகிறது. வியக்கத்தக்க வகையில் அவரது கம்பேக் இருக்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.
ஆம், சச்சின் குறிப்பிட்டதை போல, ஸ்டீவ் ஸ்மித் மற்ற வீரர்களில் இருந்து மாறுப்பட்டவர்தான். நடப்பு ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் அவர் 589 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.