இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள், தினக் கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையிலும், கரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். குறிப்பாக, விளையாட்டு நட்சத்திரங்களான சச்சின், கோலி, ரோஹித் சர்மா, பி.வி. சிந்து, தன்ராஜ் பிள்ளை உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கினர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 கோடி வழங்கவுள்ளதாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இந்த முடிவை அந்த அணியின் கேப்டனான ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார்.
முன்னதாக பிரதமரின் நிவாரண நிதிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் நிதியுதவி வழங்கின. மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடர் கரோனா வைரஸ் காரணமாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில் இந்தத் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:இந்தியா - பாக் தொடர்... அக்தரின் ஐடியாவை தூக்கி கடாசிய கபில்தேவ்!