ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று சிட்னியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பிரிஸ்பேன் ஹீட் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் மேக்ஸ் பிரயன்ட்டின் விக்கெட்டை இழந்தது.
இந்த நிலையில், களமிறங்கிய கிறிஸ் லின் சிட்னி சிக்சர்ஸ் அணியின் பந்துவீச்சை சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார். 35 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 11 சிக்சர்கள், நான்கு பவுண்டரிகள் என 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது.