கிரிக்கெட்டில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெயில். க்ரீஸில் நின்றபடியே பந்தை சிக்சருக்கு அனுப்பும் திறன் படைத்தவர். இவர் தனது அசாத்தியமான பேட்டிங் திறமையால் சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
தற்போது கனடாவில் குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், எட்மண்ட் ராயல் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதில், 166 ரன் இலக்குடன் ஆடிய வான்கூவர் அணியின் கேப்டன் கெயில், ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணியின் வெற்றிக்கு எட்டு ஓவர்களில் 59 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கெயிலின் அதிரடி ஆட்டம் அடுத்த கியருக்கு சென்றது.