ஐபிஎல் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.
இந்தப் போட்டியில், சிஎஸ்கே அணியின் 'சின்ன தல' ரெய்னா, ஆர்சிபி அணியின் கேப்டன் கிங் கோலி ஆகிய இருவரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது.
172 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா ஒரு சதம், 35 அரைசதங்களுடன் இதுவரை 4,985 ரன்களை குவித்து, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, கிங் கோலி 155 போட்டிகளில் நான்கு சதம், 34 அரைசதங்கள் உட்பட 4,948 ரன்களை விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதனால், இவ்விரு வீரர்களில் முதலில் யார் 5,000 ரன்களை கடந்து புதிய சாதனைப் படைப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான பதில் மார்ச் 23ஆம் தேதி சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டியில் தெரிந்துவிடும்.