டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், ஒன்பது அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றனர். அந்த அணிகள் மூன்று டெஸ்ட் தொடரை சொந்த மண்ணிலும், மற்ற மூன்றை அந்நிய மண்ணிலும் விளையாடுகின்றன.
இந்தத் தொடரின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு லண்டன் லார்ட்ஸில் ஜூன் 10 முதல் 14 வரை நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 196 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொன்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து இந்திய வீரர் புஜாரா கூறுகையில்,
"ஒருநாள், டி20 உலகக் கோப்பை தொடரை வெல்வதை விட டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதே சிறந்ததாக உணர்கிறேன். அதற்கு முக்கிய காரணமே டெஸ்ட் போட்டியின் ஃபார்மெட்டும் அதில் நிறைந்திருக்கும் சவாலும்தான். ஒரு வீரரின் முழுத் திறனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோதிப்பது டெஸ்ட் போட்டிதான்.
கடந்த மற்றும் நிகழ்கால கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்தது என கூறுவார்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதை விட சிறந்தது வேறெதுவும் இருக்காது. தற்போது சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பாலான அணிகள் அந்நிய மண்ணில் சொதுப்புகின்றனர். ஆனால், இந்திய அணி அந்நிய மண்ணில் நடைபெறும் தொடர்களையும் வெல்ல ஆரம்பித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரையில், எந்த அணியாக இருந்தாலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம். அதற்கு அவர்கள் சொந்த மண்ணில் மட்டுமில்லாமல் அந்நிய மண்ணிலும் வெற்றிபெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் அணியின் 'புதிய பெருஞ்சுவர்' புஜாரா!