இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.13) தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் இளம் வீரர் சுப்மன் கில் களமிறங்கினர், இதில்சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிறங்கிய புஜாராவும் 21 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலியும் டக் அவுட்டாகி நடையைக் கட்டினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டு வந்தார்.
அதன்பின் ரோஹித்துடன் இணைந்த அஜிங்கியா ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது ஏழாவது சதத்தைப் பதிவு செய்தார்.
அவருடன் இணைந்து விளையாடி வந்த ரஹானேவும் அரைசதம் கடக்க, இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. பின்னர் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேக் லீச் பந்துவீச்சில் மோயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.