இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவைப் போன்றே நடைபெறுகிறது. இதுவரை 12 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 13ஆவது சீசனில் பங்கேற்கவுள்ள வீரர்களின் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
மொத்தம் எட்டு ஐபிஎல் அணிகள் பங்கேற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு வீரரையும் தேர்வு செய்வதில், அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. மொத்தம் 338 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். அதில் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் என 62 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டனர்.
எப்போதும் எதையும் கேஷுவலாக எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனியைப் போலவே அந்த அணியின் நிர்வாகமும் இன்று நடந்துகொண்டது. அதை பிரதிபலிக்கும் விதமாக ஏலத்தில் பங்கேற்ற சென்னை அணியின் செய்கைகள் அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் ஏலம் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கேவின் ட்விட்டர் பக்கத்தில், ‘வணக்கம் டா மாப்ள, கொல்கத்தால இருந்து’ என பதிவிட்டனர்.
இன்றைய ஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் விடப்பட்டார். அவரை வந்த வேகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதை குறிக்கும் வகையில் சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் மாயி படத்தில் வடிவேலு நடித்திருந்த நகைச்சுவை காட்சியில் வா மா மின்னல்... என கூப்பிட்டதும் பெண் வேகமாக ஓடிவிடுவார். அந்தக் காட்சியின் துணுக்கினைப் பதிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வரிசையாக பல வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. ஆனால், அச்சமயம் சென்னை அணி நிர்வாகத்தினர் யாரையும் ஏலம் கேட்காமல் அமைதியாக இருந்தனர். இதற்கு நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் காட்சியை பதிவிட்டு தங்களைத் தாங்களே கலாய்த்தனர் சிஎஸ்கேகாரர்கள்.
அடுத்ததாக அதிரடி மன்னர்களான ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வேல், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் ஏலம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. ஆனால் இம்முறையும் சென்னை அணி நிர்வாகம் அமைதியை மட்டுமே கடைபிடித்தது. இதற்கு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதி என்னது சிவாஜி செத்துட்டாரா என ஆச்சரியமாக கேட்கும் படத்தை பதிவிட்டு, என்னது மேக்ஸ்வெல், வோக்ஸ் ஏலம் முடிஞ்சிடுச்சா என ட்வீட் செய்தனர்.
இப்படி நடந்து கொண்டிருந்த ஏலத்தில் திடீரென புகுந்த சென்னை அணி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சும்மா இருந்தாலே மீம்ஸ் போடுவாங்க இப்ப சொல்லவா வேணும் நம்ம சிஎஸ்கே ட்விட்டருக்கு. இப்போ பேட்ட படத்தில் ரஜினி ஸ்வீட் சாப்ட போறோம் என்ற டயாலாக்கை பதிவிட்டு கெத்து காட்டினர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத்தின் ட்வீட்டை மறுபதிவிட்டு, சரி அப்போ கொஞ்சம் மிக்சர் சாப்பிடலாம் என பதிவிட்டனர்.
இப்படி எந்த வீரருக்கும் போட்டி போடாத அணியாக இருந்த சென்னை அணி திடீரென்று ஆஸ்திரேலியாவின் நாதன் கோல்டர் நைல்லுக்கு வரிந்துக் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது. அவரை வாங்க வேண்டும் என எண்ணிய மும்பை அணியும் சென்னை அணியுடன் போட்டி போட்டுக் கொண்டு ஏலத் தொகையை உயர்த்திக் கொண்டே போனது. இறுதியில் அவரை மும்பை அணி எட்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இதை சுட்டிக் காட்டும்விதமாக அண்ணாமலை படத்தில் ஏலத்தில் பங்கேற்கும் ரஜினி, சரத் பாபுவுக்கு எதிராக ஏலம் கேட்பார். பின் திடீரென்று ஏலம் கேட்பதை நிறுத்திவிடுவார் இறுதியில் சரத் பாபு அதிக தொகை கொடுத்து அந்த ஏலத்தை முடிப்பார். இந்தக் காட்சியின் துணுக்கை பதிவிட்டு கலாய்த்தனர் நம்ம சிஎஸ்கேவாசிகள்.
மீண்டும் ஒரு இடைவேளைக்குப் பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லாவை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அப்போது பியூஸ் சாவ்லா உடன் அல்வா என பதிவிட்டும், டாடிஸ் ஆர்மிக்கு புதிய உறுப்பினர் வந்துவிட்டார் என்றும் சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இவ்வாறு சீரியஸாக ஏலம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் சென்னை அணியின் ட்விட்டர் பக்கம் மீம்ஸ்களை பதிவிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தியது.