தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

10 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்! - Future of Indian Cricket

'India is Producing World Class Batsmans and Pakistan is Producing World Class Bowlers'. ஆனால் இப்போது இந்திய அணியிலிருந்தும் சர்வதேச தரத்திலான வேகப்பந்துவீச்சாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தசாப்தத்தில் மட்டுமல்ல, இதுவரை இந்திய பேட்ஸ்மேன்கள் ஓய்வுபெற்றால் மற்றொரு பேட்ஸ்மேன் எளிதாக அந்த இடத்தைப் பூர்த்திசெய்துவிடுவார். ஆனால் பந்துவீச்சில் இன்றுவரை ஜாகீர் கானுக்கும் கபில் தேவுக்கும் மாற்று வீரரே கிடையாது.

changes-of-indian-cricket-in-this-10-years
changes-of-indian-cricket-in-this-10-years

By

Published : Jan 1, 2020, 5:23 AM IST

2010 முதல் 2019 ஒரு தசாப்தம். கண்மூடி பார்த்தால் இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எண்ணிலடங்கா மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்திய கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவது குறைந்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்துகிறார்கள்.

இந்த 10 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டின் டிரான்சிஷன் பீரியட் (transition period) என்றே கூறலாம். 90ஸ் கிட்ஸ்களின் ஹீரோக்களான சச்சின், டிராவிட், லக்‌ஷ்மண், சேவாக், ஜாகீர் கான் எல்லாம் ஓய்வை அறிவித்ததையடுத்து, இவர்கள் இடத்திற்கு வந்த கோலி, புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் அசுரத்தனமாய் இந்திய அணியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்கின்றனர்.

''India is Producing World Class Batsmans and Pakistan is Producing World Class Bowlers''. ஆனால் இப்போது இந்திய அணியிலிருந்தும் சர்வதேச தரத்திலான வேகப்பந்துவீச்சாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தசாப்தத்தில் மட்டுமல்ல, இதுவரை இந்திய பேட்ஸ்மேன்கள் ஓய்வுபெற்றால் மற்றொரு பேட்ஸ்மேன் எளிதாக அந்த இடத்தைப் பூர்த்திசெய்துவிடுவார். ஆனால் பந்துவீச்சில் இன்றுவரை ஜாகீர் கானுக்கும் கபில் தேவுக்கும் மாற்று வீரரே கிடையாது.

Transition Period:

இந்த டிரான்சிஷன் பீரியடில் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அனைவரும் ஓய்வுபெற்றதையடுத்து, அவர்களின் இடத்தை புதிய வீரர் வந்து நிரப்புவார். அப்போது அந்தப் புதிய வீரருக்கு முன்னதாக ஆடிய வீரரின் இடத்தை நிரப்ப கால அவகாசம் இருக்காது. ரசிகர்கள் உடனடியாக பலனை எதிர்பார்ப்பார்கள். உதாரணத்திற்கு தோனி ஆடிய இடத்தில் ரிஷப் பந்த் ஆடும்போது, ரசிகர்கள் இன்றுவரையிலும் தோனி போல் பந்த் ஆடவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். ஆனால் ரிஷப் பந்த்திற்கு போதிய நேரம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாக உள்ளது. தோனியை போல் ஆடுவதற்கு பந்த் எடுத்துக்கொள்ளும் நேரமே டிரான்சிஷன் பீரியட்.

ரிஷப் பந்த்

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றதையடுத்து சீனியர் வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வை அறிவித்துவந்தனர். அதனோடு சேர்த்து முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்தியா பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றபோது இந்திய அணியின் செயல்பாடுகள் எடுபடவேயில்லை. இதற்கு முக்கியக் காரணம் இந்தியா அணியில் போதுமான சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்கள் இல்லை என்ற விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்கள் உண்மையும்கூட.

2014ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் 18 வேகப்பந்துவீச்சாளர்கள் அறிமுகமாகியுள்ளார்கள். ஆனால் அவர்களில் தற்போதுள்ள ஆறு பந்துவீச்சாளர்களைக் கடந்து வேறு யார் பெயரும் ரசிகர்களின் நினைவிலேயே இல்லை. ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஓடிவந்து பந்துவீசுகையில், அந்த பந்து 145 கிமீ வேகத்தில் பேட்ஸ்மேனைக் கடந்து ஸ்டம்பில் பட்டு ஸ்டம்புகள் சிதறும் காட்சியைப் பார்ப்பதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சியைப் பார்க்க, இந்திய ரசிகனுக்கு கொஞ்சம் கொடுத்துவைக்கவில்லை.

இந்திய அணி 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி 0-4 என ஆஸ்திரேலியாவிடம் தொடரைப் பறிகொடுத்தது. அப்போது ஆஸ்திரேலிய ஓய்வறையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் குறித்து மட்டுமே தொடர்ந்து பேசப்பட்டது. அவர் யாரென்றால் இஷாந்த் சர்மா. அங்கு பேசப்பட்டது என்னவென்றால், ’’இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்தத் தொடரில் கைப்பற்றிய அனைத்து விக்கெட்டுகளுக்கும் இஷாந்த் சர்மா ஒரு முனையிலிருந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது மட்டும்தான் காரணம்’’ எனப் பேசினார்கள்.

இஷாந்த்

2014ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிக்கொள்ள, விராட் கோலி தலைமையில் எதிர்கால இந்திய டெஸ்ட் அணி கட்டமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரர் மட்டுமல்ல, புதிய சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்களையும் கண்டறிய வேண்டியிருந்தது. அதற்குத் தோனியும் மறைமுகமாக உதவி செய்தார் என்றே கூறலாம். ஒருநாள் போட்டிக்கு முதலில் தேர்வான புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா ஆகியோரை டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்ததையடுத்து உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, உள்நாட்டு டெஸ்ட் தொடர்கள் என அடுத்தடுத்து இந்தியா பங்கேற்றது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தயார்செய்யப்பட்ட ஆடுகளங்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கான அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் என அனைவரும் போட்டிபோட்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனிடையே இந்திய அணியின் பேட்டிங்கிலும் வலு அதிகரிக்கத் தொடங்கியது. விராட் கோலி தனி ஆளாக ஒரு ஏலியன் இன்னிங்சுகளை ஆட, புஜாரா, ரஹானே, ராகுல் என அனைவரும் தங்களை முன்னேற்றிக்கொண்டே வந்தனர். இதையடுத்து தங்கச்சுரங்கம் ஹர்திக் பாண்டியாவும் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்துதான் இந்திய அணி வெளிநாட்டு கிரிக்கெட் பயணங்களுக்கு தயாரானது. ஒருபக்கம் ஸ்டெயின், பில்லண்டர், மோர்கல், பெலுக்வாயோ, இங்கிடி என மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க வேண்டும், இன்னொரு பக்கம் எல்கர், மார்க்ரம், ஆம்லா, டி வில்லியர்ஸ், டூ ப்ளஸிஸ் என சிறந்த வீரர்களை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்.

இந்திய அணியிலோ புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா. அதில் பும்ராவின் அறிமுகத் தொடரும் அதுதான். இந்திய வீரர்களின் பந்துவீச்சு எடுக்குமா எடுக்காதா என்ற கேள்வியோடு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிரடியாய் அமைந்தது. புவனேஷ்வர்தென் ஆப்பிரிக்க அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி பந்துவீச்சில் கலக்கியது. இந்தத் தொடரின் மூன்று போட்டியிலுமே இந்தியப் பந்துவீச்சாளர்கள் 60 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமலேயே களமிறங்கியது. அதற்கு கைமேல் பலன். மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை சுவைத்தது.

புவனேஸ்வர் குமார்

அதையடுத்து இங்கிலாந்து தொடருக்குப் பயணம் செய்தது. அந்தத் தொடரை 4-1 என இழந்தாலும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறிதான் போனார்கள். இரு தொடர்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியத் தொடர்தான் வெற்றியை சுவைக்க சரியான தொடராக அமைந்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வேட்டையாடினர் என்றே கூறலாம்.

முக்கியமாக பும்ராவின் எழுச்சி, இந்திய வேகப்பந்துவீச்சு மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது. முதல் இன்னிங்சில் பும்ரா என்றால், இரண்டாவது இன்னிங்சுக்கு ஷமி இருக்கிறார் எனக் காலரைத் தூக்கிவிட்டு விக்கெட்டுகளை சூறையாடியது இந்திய அணி. அதன் பலன் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியர்களை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

இதையும் படிங்க: கெத்தா நடந்து வரான்... காலரத்தான் தூக்கி வரான்... பும்ராவின் கதை

அதையடுத்து பும்ராவை மட்டுமே நம்பி அனைத்து போட்டிகளையும் ஆட முடியாது. அவருக்கு இணையான வீரர் இல்லையென்றாலும், அவரது இடத்தில் சிறப்பாக செயல்படும் வீரரை தயார் செய்ய வேண்டும்.

அதற்காக முதலில் உள்ளூர் தொடர்களில் உமேஷ் யாதவிற்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவந்தன. அதற்கேற்ப உமேஷ் யாதவும் சிறப்பாகச் செயல்பட்டுவந்தார். ஆனால் அனைவருக்கும் உமேஷ் ஆச்சரியமளித்தது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக முதல் ஓவர் வீசும்போதே வெளியேற, அனைத்து பாரமும் உமேஷ் யாதவ் தலையில் விழுந்தது. ஆனால் அந்தப் பாரத்தை சுமையாக நினைக்காமல் சாதனையாக மாற்றிக்காட்டினார். அந்தப் போட்டியில் மொத்தமாக இந்திய வீரர்கள் எடுத்த 20 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.

அதையடுத்து இந்தியா வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு அணிக்கு ஸ்பின் சவால் காத்திருக்கிறது எனக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் இந்திய பிட்ச்சுகளில் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் டான் என நினைத்த தென் ஆப்பிரிக்க அணிக்கு, வேகப்பந்துவீச்சுகளில்தான் ஆச்சரியமளித்தது.

ஷமி

அதில் உமேஷ் ஆடிய இரண்டு போட்டிகளில் 11 விக்கெட்டுகள், அதேபோல் ஷமியும் தனது பங்கிற்கு ஸ்டம்புகள் சிதற சிதற 13 விக்கெட்டுகளை அள்ளினார். ஷமியின் பந்துவீச்சை இரண்டாவது இன்னிங்ஸ்களில் பார்த்த விமர்சகர்கள், இனி இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சில் நேராக ஷமியிடம் பந்தைக் கொடுத்தால்போதும், அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திவிடுவார் என செகண்ட் இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் எனப் பட்டம் கொடுத்தனர்.

இங்கே இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய கவுண்டி கிரிக்கெட் ஆடிய பிறகு, பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளது. முன்னரெல்லாம் சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணியால் சொந்த மண்ணில் வெற்றிபெற முடியுமா என ஊடகங்கள் கேள்வி எழுப்பின. ஆனால் இன்றைய தேதியில் இந்திய அணி போன்ற ஒரு வேகப்பந்துவீச்சு கூட்டணியைப் பார்த்து பயம் கொள்ளாத அணியே கிடையாது.

சின்னதாக ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி 3-0 என வீழ்த்துவார்கள். அப்போது ஸ்பின் ட்ராக்கில் வைத்து இந்திய அணி தங்களை வீழ்த்திவிட்டதாக என்று கூறிய தென்னாப்பிரிக்காவின் கருத்திற்கு பதிலளிக்கும்விதமாக இந்த ஆண்டு வந்த அந்த அணியை முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சை வைத்து ஆல் - அவுட் செய்து காட்டியது இந்தியா.

விராட் கோலி

முன்னாள் கேப்டன் தோனி தேடித்தந்த வீரர்களை சரியாக பட்டைத்தீட்டி இன்று விராட் கோலி வைரமாக மாற்றியுள்ளார். இப்போது அந்த வைரங்கள் அனைத்து அணிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், வீரர்களின் ஃபிட்னஸ்.

2000 முதல் 2005 வரையிலான இந்திய வீரர்களில் ஃபிட்னஸ் என்றால் கிலோ எவ்வளவு என்ற ரேஞ்சுக்குதான் இருக்கும். ஆனால் அப்படியே இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களைப் பார்த்தால் ஃபிட்னஸ் ஃப்ரீக்காக இருப்பார்கள்.

ஆனால் இன்றைய இந்திய அணியிலோ அனைத்து வீரர்களின் உடலிலும் 6 பேக் என்னும் படிக்கட்டுகள் இல்லாமல் இல்லை. அதற்கு முழுக்காரணமும் விராட் கோலிதான்.

இதையும் படிங்க: கொஞ்சம் ஒதுங்கிரு... ஓடி பதுங்கிரு... வர்றது தலைவரு... கோலி பராக்..! - பாகம் -1

தனது பேட்டிங்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே அளவிற்கு ஃபிட்னஸிலும் கவனம் செலுத்திவருகிறார். இந்திய அணியில் யோ யோ டெஸ்டை முடிக்காமல் இடம்பெற முடியாது என்ற உறுதியும், வீரர்களின் ஃபிட்னஸிலும் கவனம் செலுத்துவதால் இந்திய அணி வீரர்கள் பலரும் காயமின்றி விளையாடிவருகின்றனர்.

பும்ரா

இந்த 10 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கும் கூட டிரான்சிஷன் பீரியட்தான். இதில் தென் ஆப்பிரிக்க அணியால் இன்றுவரை மீள முடியவில்லை, ஆஸ்திரேலிய அணி இப்போதுதான் மீண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் சவாலளிக்கிறது. ஆனால் இந்திய அணியின் டிரான்சிஷன் பீரியடிலும் சரியாக ஆடி இன்று அசைக்க முடியாத அணியாக வலம்வந்து-கொண்டிருக்கிறது.

'Fast Bowling is an Art' அது வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு கைவந்த கலை. அந்தக் கலையில் இன்று இந்தியர்கள் டிகிரி பெற்றுள்ளனர். பும்ராவை வார்த்து அன்றைய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் ஆம்புரூஸ் பொறாமைக் கொள்கிறார் என்றால், இந்திய அணியின் பந்துவீச்சில் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பது தெரியும். இந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி பெற்ற மிகப்பெரும் டிரான்சிஷன் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கியதுதான்!

பும்ரா

இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket

ABOUT THE AUTHOR

...view details