இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கான்பெர்ராவில் நேற்று (டிச.04) நடைபெற்றது. இப்போட்டியின்போது இந்திய வீரர் ஜடேஜா காயமடைந்தார். பின்னர் அவருக்கு மாற்று வீரராக யுஸ்வேந்திர சஹால் களமிறங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஜடேஜாவிற்கு மாற்று வீரராக வந்த சஹால் பந்துவீசியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மேலும் போட்டியின்போதே ஆஸி., அணி பயிற்சியாளர் லங்கர், ஆட்டநடுவர் டேவிட் பூனிடம் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “முதலில் ஆட்டநடுவராக இருந்தவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டேவிட் பூன். அவர் ஜடேஜாவிற்கு மற்றாக சஹால் பந்துவீசுவதற்கு அனுமதித்தார். மேலும் ஐசிசியின் தற்போதுள்ள விதிகளின்படி மாற்று வீரராக வருபவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு உதவலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் இப்போட்டியில் எந்த விதிமீறலும் நடைபெற்றுள்ளதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த விதியை நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் நாங்கள் விளையாடும் காலங்களில் இதுபோன்ற விதிகள் இருந்ததில்லை. ஆனால் தற்போது அது விதிகளுக்குள்பட்டது. அப்படியெனில் சஹால் பந்துவீசியதிலும் எந்தத் தவறும் கிடையாது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஈஸ்ட் பெங்கால்?