ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழனன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் இணை அபாரமான தொடக்கத்தை தந்தது. இதில் சிறப்பாக விளையாடிய வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நான்கவது 150 ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 312 ரன்களை கடந்தது.
அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் 154 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ஸ்மித்தும் 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைவரை மூன்று விக்கெட்டுகளை இழந்து 400 ரன்களை கடந்துள்ளது. அந்த அணியில் லபுசாக்னே 105 ரன்களுடனும், வேடே 30 ரன்களுடனும் களத்திலுள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் யாஷிர் ஷா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை விட 160 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் மேனாக மாறிய சஹா...! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!