ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நாளை சிட்னியில் தொடங்கவுள்ளது. சிட்னியில் தொடங்கும் தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில், "தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். மகளிர் பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு விளையாடியதால், ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மை, சூழல் குறித்து நன்கு தெரியும். சரியான மனநிலையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தத் தொடரில் இந்தியாவில் எந்த அணியாக இருந்தாலும், அவர்களுக்கு கடும் நெருக்கடி தர முடியும்.
இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் நல்ல மனநிலையுடன் விளையாட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள் என்பது தெரியும். சிட்னி ஆடுகளம் மெதுவான பந்துவீச்சுக்கு உதவினால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். எந்த மைதானத்தில் விளையாடினாலும் இந்திய ரசிகர்கள் எங்களுக்கு அதிகளவில் ஆதரவு அளிப்பார்கள். நாளைய போட்டியிலும் எங்களுக்கு அதிகமான ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
கடந்தமுறை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, இம்முறை கோப்பையுடன் தாயகம் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா இந்திய மகளிர் அணி? - பலம், பலவீனம் குறித்த அலசல்