இந்த ஆண்டு நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து என ஐசிசி அறிவித்தவுடனே, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணியில் பிசிசிஐ களமிறங்கியது.
இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டால் ரூ. 4 ஆயிரம் கோடி வரை பிசிசிஐ-க்கு இழப்பு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கு ஸ்டார் நிறுவனத்திடம் ரூ. 3 ஆயிரத்து 300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2 ஆயிரம் கோடி முன்பணமாக அந்நிறுவனம் பிசிசிஐ-யிடம் செலுத்தியுள்ளது.
அதேபோல் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் ரூ. 440 கோடி, இதர ஸ்பான்சர்கள் ரூ. 170 கோடி என பிசிசிஐ-க்கு வழங்கியுள்ளது.
இதையடுத்து ஐபிஎல் நடைபெறாமல் போனால் ஸ்டார் நிறுவனத்திடம் பெற்ற முன்பணத்தை மீண்டும் செலுத்தாமல், ஒப்பந்தத்தை மட்டும் மேலும் நீடிக்கலாம். இதனால் நீதிமன்றத்தில் ஸ்டார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.
எனவே இவற்றை தவிர்க்க ஐபிஎல் தொடரை இந்த ஆண்டில் கட்டாயம் நடத்த வேண்டிய சூழலில் பிசிசிஐ உள்ளது.
இதுமட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டியானது ரசிகர்களின் வருகை இல்லாமல் நடைபெறும் என்று கூறப்படுகிறுது. இதனால் அணி உரிமையாளர்களும் தங்களது அணி ஸ்பான்சர்களால் பல்வேறு நிபந்தணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, இழப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் மாதம் 29ஆம் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டிருப்பது, ஐபிஎல் நடத்துவதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கிய நிலையில், தற்போது செப்டம்பர் முதல் நவம்பர் வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020 தொடரில் வீட்டிலிருந்தே வர்ணனை சாத்தியமே - இர்பான் பதான்