ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கு, புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாண்டிங் தலைமையில் ஒரு அணியும் கில்கிறிஸ்ட் தலைமையில் ஒரு அணியும் கட்டமைக்கப்பட்டன. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் பயிற்சியாளராகவும், கில்கிறிஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் பயிற்சியாளராகவும் செயல்படத் தொடங்கினர்.
இதையடுத்து மெல்போர்னில் உள்ள ஓவல் மைதானத்தில் புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த ஆட்டம் 10 ஓவர்கள் ஆட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய பாண்டிங் லெவன் அணிக்கு ஜஸ்டின் லாங்கர் - ஹெய்டன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். லாங்கர் 6 ரன்களிலும், ஹெய்டன் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் பாண்டிங் - வீராங்கனை லிட்ச்ஃபீல்டு இணை விளையாட வருகை தந்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் பாண்டிங் பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுக்கப்பட்டது.
14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பாண்டிங் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற, லாரா களமிறங்கினர். அத்தனை நேரமாக வயதாகிய வீரர்கள் ஆட்டமாக தெரிந்த போட்டி, லாரா களமிறங்கி தனது டிரேட் மார்க் ஷாட்டான கவர் டிரைட்களை அடித்து பறக்க ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்.
அதிலும் சைமண்ட்ஸ் வீசிய 9ஆவது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிப் போட்டியை சுவாரஸ்யப்படுத்தினார், லாரா. இறுதியாக 10 ஓவர்களின் முடிவில் பாண்டிங் லெவன் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்தது.