2019ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியை எதிர்த்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஹோபர்ட் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மேத்யூ வேட் - ஜுவல் ஆகியோர் களமிறங்கினர். வேட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் ஹுவல் 5, மிலெங்கோ 6, பெய்லி 0, மில்லர் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஹோபர்ட் அணி 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய லாக்ளின் பின்னர் வந்த பென் மெக்டோர்னட் உடன் இணைந்த வேட் நிதானமாக ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 98 ரன்களை எட்டியபோது, 61 ரன்கள் எடுத்து வேட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சேர்ந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து 127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்கு டாம் பேண்டன் - பிரியண்ட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இந்த இணை சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தபோது, பேண்டன் 17 ரன்களில் வெளியேற, பின்னர் ப்ரியண்ட் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய ரென்ஷா, பர்ன்ஸ் ஆகியோர் வந்த வேகத்தில் போலாண்ட் பந்தில் ஆட்டமிழக்க, எதிர்பாராவிதமாக லின் ரன் அவுட்டாகினார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. பின்னர் வந்த பியர்சன் - பென் கட்டிங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த இணையைப் பிரிக்க முடியாமல் ஹோபர்ட் அணி வீரர்கள் திணற, இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பிரிஸ்பேன் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இறுதிவரை ஆட்டமிழக்காத பென் 43 ரன்களும், பியர்சன் 23 ரன்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் அணி, பிக் பாஷ் தொடரில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: பனிப்பொழிவில் மகளுடன் ஆட்டம்போடு தோனி!