வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இதைத்தொடர்ந்து, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நட்சத்திர ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான இவர், 2016இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 தொடரில்தான் இறுதியாக விளையாடினார்.
அதன்பின் 2018இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதனிடையே, பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.