வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தவர் டி.ஜே. பிராவோ. இவர் 2018ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வுக்குப்பின் ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் டி20, டி10 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுவந்தார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றிருந்த பிராவோ, தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
இது குறித்து பிராவோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று நான் எனது ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளேன். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது பயிற்சியாளராக பில் சிம்மன்ஸ், கேப்டனாக பொல்லார்ட் ஆகியோர் செயல்படுவதினால் இதனை நான் செய்துள்ளேன். வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இத்தகவலை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவர்களால் தான் இதனை செய்ய முடியும் - பிரையன் லாரா ஓபன் டாக்!