இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து வருகிறது. இதில் 159 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு, சுப்மன் கில் - புஜார இணை வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கபட்ட சுப்மன் கில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த புஜாராவும் 17 ரன்களில் கம்மின்ஸிடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - ஹனுமா விஹாரி இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் விஹாரி 21 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரிஷப் பந்த்தும் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் டிம் பெய்னிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டில், விக்கெட் கீப்பிங் முறையில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும் குறைந்த போட்டிகளில் 150 (33 போட்டிகளில்) விக்கெட்டுகளை கைப்பற்றிய விக்கெட் கீப்பர் என்ற தென் ஆப்பிரிகாவில் குயிண்டன் டி காக்கினுடைய (34 போட்டிகள்) சாதனையையும் முறியடித்தார்.