ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி மார்ச் 13ஆம் தேதியன்று சிட்னியில் ரசிகர்கள் யாருமின்றி நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியும் பெற்றது.
இதற்கிடையில் கோவிட்-19 தொற்றுத் தாக்கம் ஆதிகரிக்க தொடங்கவே, மீதமுள்ள போட்டிகளை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்கள் நேற்று தங்களது தாயகம் திரும்பினர்.
ஆனால் கோவிட்-19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பும் மக்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தங்களை தனிப்படுத்திகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்களும் இரண்டு வாரங்கள் (14 நாள்கள்) தங்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பொதுவிவகார மேலாளர் ரிச்சர்ட் பூக் (Richard Boock) கூறுகையில், ‘நியூசிலாந்து அணி வீரர்கள், ஆலோசகர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்றால் என்ன என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் நாங்கள் அனுப்பியுள்ளோம், எங்களுக்குத் தெரிந்தவரை அவர்கள் அனைவரும் அதைக் கண்டிப்பாக பின்பற்றுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐசிசி மேம்பாட்டுக்குழு நடுவர்கள் பட்டியலில் இணைந்த இந்தியப் பெண்கள்!