2019, ஜூலை 11
இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி. மழையின் காரணமாக இரண்டாவது நாளாக தொடர்ந்த ஒருநாள் போட்டி. இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி களத்தில் இருக்கிறார். அடுத்த ஓவரை வீச நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் தோனியின் ஆஸ்தான ட்ரேட்மார்க் ஷாட்டான பேக்வார்டு பாய்ண்ட் திசையில் சிக்சர். 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அடுத்த பந்து யார்க்கர். ரன்கள் ஏதும் இல்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்கொயரில் தட்டிவிட்டு தோனியின் கால்கள் வேகம் எடுக்கின்றன. முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்காக ஓடி வரும் போது, கப்தில் சரியாக ஸ்டெம்புகளில் டைரக்ட் ஹிட் அடிக்கிறார்.
பொதுவாக எவ்வித சலனமும் இல்லாமல் தோனியின் முகம் காணப்படும். ஆனால் அன்று, மூன்றாவது நடுவரின் தீர்ப்பைப் பார்த்ததும் தலை குனிந்தவாறு களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறுகிறார். இந்தியாவுக்கே அன்று ஹார்ட் அட்டாக் தான். உலகக்கோப்பைக் கனவு பறிபோனது. கமெண்ட்ரியில் ”is that? Dhoni Walks Back... for the last time?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மைதானத்தில் இருந்த அனைவரும் தோனிக்காக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
'Even through the tough times, whats important is, to go through everything with a Smile on your face'இது தோனி கூறிய வார்த்தைகள். ஆனால் அந்தப் போட்டியின் தோல்வியிலிருந்து இதுவரை யாராலும் வெளிவர முடியவில்லை. ஏன் தோனிக்கே சில மாதங்கள் பிடித்தன.
அந்தப் போட்டி முடிவடைந்ததை அடுத்து, ”அவ்வளவு தானா... இனி சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஆட மாட்டாரா?” போன்ற கேள்விகள் இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
கிரிக்கெட் மட்டுமல்ல, எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி, தோல்வியை கடந்து ஆடும் வீரர்கள் சிலர் மட்டுமே. அதில் முதன்மையானவர் தோனி! உலகக்கோப்பைத் தொடருக்கு பின் தோனியை களத்தில் பார்த்து ஒரு வருடம் ஆகப்போகிறது. இதுவரை தோனி தரப்பில் ஓய்வைப் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. கிரிக்கெட்டில் இருக்கிறாரா? ஐபிஎல் தொடரில் மட்டும் தான் பங்கேற்பாரா? சர்வதேச கிரிக்கெட் ஆடப்போவதில்லை என்றால், இளையோருக்கு வாய்ப்பை வழங்கலாமே? தோனியின் இருப்பால் விக்கெட் கீப்பர்களுக்கு பல அழுத்தங்கள் ஏற்படாதா? என இந்த ஒரு வருடத்தில் பல கேள்விகள், பல விமர்சனங்கள். ஆனால் தோனியோ வழக்கம் போல் சிரிப்பை மட்டுமே பதிலாக வழங்கி வருகிறார்.
வயதாகி விட்டதால் ஒரு விளையாட்டு வீரரை ஓய்வுக்கு தள்ள முடியுமா? ஃபார்மில் இருக்கும் ஒரு வீரர், உடற்தகுதியுடன் இருக்கும் ஒரு வீரர் ஏன் ஓய்வுக்கு செல்ல வேண்டும்? ஓய்வை அறிவிப்பது என்பது விளையாட்டு வீரனுக்கு சாதாரண விஷயம் அல்ல. அதனை உணர வேண்டுமென்றால் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு என்பது வந்தே தீரும். அதனை அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடிவிட்டால், அவர் நேஷனல் ஹீரோ. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் இந்திய அணி தோற்றால் கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான வில்லன் அவர். இந்திய அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கும் இந்த வில்லனுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபினிஷிங் ரோலில் களமிறங்குபவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும். அதே ஆறாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணி தோல்வியடைந்தால், தோனி என்ற ஒற்றை நபரே தோல்விக்குக் காரணம் என்று அதே ஊர் முத்திரை குத்தும்.
இதையெல்லாம் தெரிந்தே தான் தோனி ஏற்றுக் கொண்டார். கேப்டனாக இருந்து கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோனி களமிறங்கி ஆடி இருக்கலாம். ஆனால் போரில் நிற்கும் தலைவனுக்கு வெற்றி தான் முக்கியமே தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. தோனி எப்போதும் வெற்றிக்காகவே ஓடினார்.
அவரைப் போன்று தன் மேல் நம்பிக்கை கொண்ட வீரரை வேறு எந்த விளையாட்டிலும் பார்க்கவே முடியாது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும், தோனி நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே இல்லை. திறமைகள் அதிகம் இருந்தாலும், தன் மேல் இருக்கும் நம்பிக்கையால் மட்டுமே தோனி உருவாகியுள்ளார். கிரிக்கெட் வீரர் என்பவர் சூழலுக்கு தகுந்தது போல் ஆட வேண்டும். அதில் தோனி எப்போதும் கில்லி தான். அப்படி ஆடி 10இல் 9 போட்டியை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர் தோனி.
இதையும் படிங்க:மிஸ் யூ ஜெர்சி நம்பர் 12!
அதேபோல் தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்ள தோனி எப்போதும் தவறியதே இல்லை. கேப்டன் ஆனதில் இருந்து 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் என பேச்சு எடுத்தால் ஜொஹிந்தர் ஷர்மாவை நினைவில் கொண்டு வந்தது, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை சிக்சர், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபியில் இஷாந்த் ஷர்மாவை 18ஆவது ஓவர் வீச வைத்தது, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தியது என, பல வெற்றிகளுக்கு முழுக்க முழுக்க தோனியே காரணம் என பலரையும் நம்ப வைத்துள்ளார். அது உண்மை என்றாலும், பலரின் உழைப்பும் இந்தப் போட்டிகளில் உள்ளது. ஒரு சில போட்டிகளில் இப்படியான மொமெண்ட்ஸ் ஒரு சில வீரர்களுக்கு இருக்கலாம். ஆனால் வாழ்நாளின் தான் ஆடிய பாதி ஆட்டங்களில் தனக்கான மொமெண்ட்ஸை தோனி தக்கவைத்துக் கொண்டதை அதிர்ஷ்டம் எனக் கூறிவிட முடியாது.