ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரின் நடப்பு சீசன் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்தது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இதனிடையே இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமாண்டா வெல்லிங்டன் 55 ரன்கள் எடுத்தார்.
பிரிஸ்பேன் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜெஸ் ஜொனாசன், ஜார்ஜியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அடிலெய்டு வீராங்கனை அமாண்டா வெல்லிங்டன் இதைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பிரிஸ்பேன் அணியில் தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி - மேடி கிரீன் இணை மூன்று ஓவர்களில் 27 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் கிரீன் 11 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சாமி ஜோ ஜான்சன் தன் பங்கிற்கு 11 பந்தில் 27 ரன்கள் (நான்கு சிக்சர்கள்) அடித்து அவுட்டானார்.
அவருக்குப்பின் வந்த ஜெஸ் ஜொனாசனும் 33, கிரேஸ் ஹாரிஸ் 2 என அடுத்தடுத்து வெளியேறினாலும் மறுமுனையில் பெத் மூனி சிறப்பாக ஆடினார். இறுதியில் அவர் அரை சதம் கடந்து பிரிஸ்பேன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டிய பிரிஸ்பேன் அணி 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.