பொதுவாக, டி20 போட்டிகள் டையில் முடிந்தால் ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக சூப்பர் ஓவர் நடைபெறுவது வழக்கமானதுதான். ஒருவேளை சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால், பின் ஐசிசியின் விதிமுறைப்படி எந்த அணி அதிகமான பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணியே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
பவுண்டரி விதிமுறைப் படி உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஐசிசி இத்தகைய விதிமுறையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, நியூசிலாந்து இரு அணிகளும் இறுதிப் போட்டியில் 241 ரன்கள்தான் எடுத்திருந்தனர். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானம் செய்ய சூப்பர் ஓவர் நடைபெற்றது.
ஆனால், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால், பவுண்டரி விதிமுறைப்படி 26-17 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் இந்த விதிமுறையை மாற்ற வேண்டும். சூப்பர் ஓவரும் டையானால் மீண்டும் சூப்பர் ஓவரை வைக்க வேண்டும் என சச்சின் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஐசிசியின் விதிமுறையை தாங்கள் பயன்படுத்தமாட்டோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில், பிக் பாஷ் டி20 தொடர் மிகவும் பிரபலமானவை. இதில் ஆடவர், மகளிர் இரு பிரிவுகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான தொடரின் இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால், பவுண்டரி விதிமுறைக்கு பதிலாக போட்டியின் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர் நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த புதிய விதிமுறையை பயன்படத்தவுள்ளது. இந்த ஆண்டிற்கான பிக் பாஷ் தொடர் டிசம்பர் 17முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதேசமயம், இந்த பவுண்டரி விதி குறித்து ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி தலைவரான அனில் கும்ப்ளே தலைமையின் கீழ் ஆசோலனை கூட்டம் ஆடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 போட்டிக்கு முன்னதாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.