ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றது. இதில், நேற்று (பிப்.6) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீரர் ஜோஷ் பிலீப் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேம்ஸ் வின்ஸ், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வின்ஸ், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. எதிரணி தரப்பில் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.