கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உலகின் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெருந்தொற்றிலிருந்து மீண்டு வரும் இங்கிலாந்து தங்களது நாட்டின் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஜூலை 8ஆம் தேதி நடத்துவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டிற்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால், அவர் இத்தொடரில் பங்கேற்பது கடினம். இதனால் இத்தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் 'பென் ஸ்டோக்ஸ் ஒரு மிகச்சிறந்த வீரர் அவரால் நிச்சயம் இங்கிலாந்து அணியை வழிநடத்த முடியும். மேலும் அவரால் சூழ்நிலைக்கேற்றவாறு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதன்காரணமாகவே பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட முடியும் என நான் நம்புகிறேன். மேலும் இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும், அதனை அவர் சரியாகப் பயன்படுத்துவார் என நான் நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.