இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றவும், ஆஷஸ் தொடரை சமன் செய்யவும் முக்கிய பங்காற்றியவர். இதனால் கிரிக்கெட் வீரர்களால் தேர்வு செய்யப்படும் பிசிஏ விருதில் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களோடு வந்திருந்தனர். அப்போது பென் ஸ்டோக்ஸின் மனைவியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து லண்டனில் வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்று, பிசிஏ விருது வழங்கும் விழாவில் பென் ஸ்டோக்ஸ், அவரது மனைவி இடையே கைகலப்பு ஏற்பட்டது என செய்தி வெளியிட்டது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ் தனது மனைவியை கழுத்தை நெரித்து தாக்குவது போன்ற படத்தையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். இது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு பதில் தரும் வகையில் பென் ஸ்டோக்ஸின் மனைவி கிளார் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், படம் ஒன்றை பதிவிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் அந்தப் பதிவில், "நானும் எனது கணவரும் அவ்வப்போது கன்னத்தில் இதுபோன்று அடித்துக்கொண்டு அன்பை வெளிப்படுத்துவது வழக்கமான ஒன்று. இதை சிலர் திரித்து செய்தியாக வெளியிட்டுள்ளனர். இதுபோன்று மோசமான விஷயங்களை சிலர் செய்வதை நம்பமுடியவில்லை" எனப் பதிவிட்டிருந்தார்.
பென் ஸ்டோக்ஸ் மனைவியின் ட்விட்டர் பதிவு இதன்மூலம் தனது கணவர் பென் ஸ்டோக்ஸ் மீது ஏற்பட்ட கலங்கத்தை அவரது மனைவியே முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். தனது மனைவியின் இந்தப் பதிவை பென் ஸ்டோக்ஸ் மறுபதிவிட்டார். முன்னதாக செப்டம்பர் மாதம் தனது குடும்பத்தின் நடந்த பிரச்னைகள் குறித்து செய்தியாக வெளியிட்ட நாளிதழ் மீது பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உலகக்கோப்பை நாயகனுக்கு கிடைத்த புதிய விருது