இங்கிலாந்து - ஆஸ்திரேலியா (3ஆவது போட்டி), இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ( முதல் போட்டி), இலங்கை - நியூசிலாந்து (2ஆவது போட்டி) என இந்த மூன்று போட்டிகள் ஒரே நாளில் நடைபெற்று ரசிகர்களுக்கு ட்ரிபுள் ட்ரீட் தந்தது. இதில், இந்திய வீரர் ரஹானே, நியூசிலாந்து வீரர் டாம் லதாம், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி தங்களது அணியை வெற்றிபெற வைத்தனர்.
ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் தனி ஒருவனாக இரண்டாவது இன்னிங்ஸில் 135 ரன்கள் விளாசியதுதான் இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், ஆல்ரவுண்டர் பட்டியலில் இவர் முதல்முறையாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 26ஆவது இடத்தில் இருந்த அவர் தற்போது 13 இடங்கள் முன்னேறி, 693 புள்ளிகளுடன் 13ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அரைசதம் விளாசிய இலங்கை அணியின் திமுத் கருணரத்னே இரண்டு இடங்கள் முன்னேறி 733 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். மற்றப்படி, இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில், இந்திய வீரர் பும்ரா பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் ஏழு ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால், இவர் ஒன்பது இடங்கள் முன்னேறி 774 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
இதில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ரபாடா 851 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 814 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.