நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, முக்கிய தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பதிவில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தும், கரோனா தொடர்பாக குழந்தைகளின் சந்தேகங்களை தீர்த்து பெற்றோர்கள் ஹீரோவாக மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்காலம். அவர்களின் அன்றாட ஹீரோக்களாக பெற்றோர்கள் மாறி, அவர்களுக்கான சூழலை உருவாக்குங்கள்.
குழந்தைகளுக்கு கரோனா குறித்த கேள்விகள் இருக்கும். மேலும் அவர்களால் எவ்வளவு புரிந்துகொள்ள முடியும் என்பதை கணக்கில் கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் பதிலளிக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளிடம் கேள்விகள் இல்லையென்றாலும், பெற்றோர்கள் கரோனா வைரஸ் குறித்து அவர்களிடம் விளக்குங்கள். அதே கேள்விகளை தொடர்ந்து கேட்டாலும், பொறுமையாக குழந்தைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.
அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றைத் தேடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் போது, உங்களையும் கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள். ஒரு பெற்றோராக உங்கள் உணர்வுப்பூர்வமான நிலையானது, உங்கள் குழந்தைகளுக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!