இந்தியா - சீனா எல்லை பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த மே மாதம் இந்திய ராணுவ அலுவலர்கள் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தபோது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்ததால் பிரச்னை வெடித்தது.
விவோ-வின் கையைவிட்டு போகிறதா ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்? - இந்தியா- சீனா எல்லை பிரச்னை
இந்தியா- சீனா எல்லை பிரச்னை காரணமாக, ஐபிஎல் தொடரில் சீன நிறுவனமான விவோ(vivo) ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்ய வேண்டுமென பிசிசிஐ-க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவிலுள்ள சீன நிறுவனங்களை மக்கள் எதிர்க்க தொடங்கினர். இத்தொடர்ந்து, இந்திய இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மத்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதில், டிக் டாக், ஹெலோ உள்ளிட்ட மிகவும் பிரபலமான செயலிகளும் அடங்கும்.
இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரின் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து சீன நிறுவனமான விவோவை(vivo) நீக்க வேண்டுமென பிசிசிஐக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களின் இந்த கருத்து தொடர்பாக பிசிசிஐ கூட்டமும் அடுத்த வாரம் கூடவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து பிசிசிஐ அலுவலர், 'இப்போதைக்கு, ஐபிஎல் தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்கு எந்தத் தேதியும் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் பிசிசிஐக்கு தற்போது வேறு சில சிக்கல்கள் உள்ளன. அதேசமயம் ஐபிஎல் தொடரின் உரிமையாளர்களும் தங்கள் கருத்துகளை கூற உரிமை உண்டு. இருப்பினும் கிரிக்கெட் மற்றும் நாட்டின் நலனுக்காக நிர்வாகிகள் ஒரு சிறந்த முடிவை எடுப்போம்' என்று தெரிவித்துள்ளார்.