தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியின் நான்காவது சீசன் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த சீசனில் விளையாடிய சில வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்திகள் வருவதாக வீரர்கள் தெரிவித்தனர்.
அந்தக் குறுஞ்செய்திகள் அனைத்தும் குறிப்பிட்ட எண்களிலிருந்து வந்துள்ளதாக வீரர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டு வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதற்காக இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலர்கள்தீவீர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து அப்பிரிவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "அடையாளம் தெரியாத ஒரு சில நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி வருவதாக சில வீரர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து எங்களின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை மேற்கோண்டுவருகிறது. மேலும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நபர்களின் எண்களை வைத்து அவர்களை கண்டுபிடிக்க முயற்சித்துவருகிறோம்” என்றார்.