விளையாட்டுத் துறையில் சாதனை புரியும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருது அளிக்கப்படுவது வழக்கம். விளையாட்டுத்துறையில் இந்த விருது மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதினை இந்திய கிரிக்கெட் வீரர்களான ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோருக்கு வழங்க கோரி மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவும் ஒரு முக்கிய காரணம். 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 192 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பேட்டிங்கில் 10 அரைசதம், ஒரு சதம் உட்பட 1,485 ரன்களை அடித்துள்ளார். சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்களில் அசத்தி வருகிறார். ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதேபோல், இந்திய மகளிர் அணியில் பூனம் யாதவ் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 41 ஒருநாள், 54 டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 137 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.