ஐசிசி சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் 2010ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இதன் ஆறாவது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்று, நான்கு போட்டிகளில் (ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை) வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து, சிட்னியில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானது.
இதனால், புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவுகளில் முதலிடம் பிடித்ததால், இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மறுமுனையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் தொடர்ந்து ஆறாவது முறையாக நுழைந்தது.