இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் அதீத ஆர்வம் காட்டிவருவது வழக்கமானதுதான். தற்போதைய நவீனக் காலக்கட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக ஸ்மார்ட்ஃபோனில் பார்க்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இருந்தாலும், தொழில்நுட்பம் வளர்வதற்கு முன் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும்தான் கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக கேட்டும், பார்த்துவந்தனர்.
தொலைக்காட்சி இல்லாத வீடுகளிலும், பயணத்தில் இருக்கும் ரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் நேரலை வர்ணனைகளை கேட்க ரேடியோதான் பெரிய அளவில் உதவியது. ஆல் இந்திய ரேடியோவில் வழங்கப்படும் நேரலை வர்ணனைகளின் மூலம் ரசிகர்கள் போட்டிகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.
ரேடியோவில் இந்திய அணியின் வர்ணனை கேட்கும் ரசிகர் அதேபோல், இந்திய அணியின் முக்கியமான போட்டிகளையும் ஆல் இந்திய ரேடியோ சுவாரஸ்யமான முறையில் வர்ணனை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கியது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரையும் ஆல் இந்திய ரேடியோ நேரலையாக வர்ணனை செய்தது. ஸ்மார்ட்ஃபோனின் ஆதிக்கம் இருந்தாலும், ரேடியோவில் ஒலிக்கும் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனைகளை கேட்கும் ரசிகர்கள் இன்றளவும் அதிகம் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளையும் பிரபலப்படுத்தும் வகையில் தற்போது பிசிசிஐ புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்தவகையில் இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளின் அனைத்துவிதமான போட்டிகள் மட்டுமில்லாமல் இந்தியாவில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டிகளின் ரேடியோ ஒலிபரப்பு உரிமத்தையும் பிசிசிஐ பெற்றுள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஆல் இந்திய ரேடியோ நேரலையாக வர்ணனை செய்யவுள்ளது.
இதனால், பயணம் மேற்கொள்ளும் ரசிகர்கள் இனி மொபைல் டேட்டா தீர்ந்தாலும், நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றாலும், இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஆல் இந்திய ரேடியோ மூலம் கேட்டு மகிழலாம். இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே தர்மசாலாவில் தொடங்கும் முதல் டி20 போட்டியிலிருந்து இந்த ஒப்பந்தம் அமலுக்குவருகிறது.