உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தினால், பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவில் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 தொடரில் 13ஆவது சீசன் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மார்ச் 13ஆம் தேதி பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக் காரணமாக ஐபிஎல்லின் இந்த சீசன் நடத்தப்படுமா? என்ற கேள்வி பலரது மனத்திலும் எழத்தொடங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் 2020-இன் வாய்ப்புகள் குறித்தும், ரசிகர்களின் பாதுகாப்புக் காரணங்கள் குறித்தும் விவாதிக்க பிசிசிஐ, ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டம் வருகிற 24ஆம் தேதி நடத்தவுள்ளதாக பிசிசிஐ முடிவுசெய்துள்ளது.
மேலும் பிசிசிஐ அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் வைரஸ் தொற்று காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளதால், இக்கூட்டத்தை பிசிசிஐ அலுவலகத்தில் வைக்க முடியாது என்றும், அலுவலர்கள், உரிமையாளர்களின் கூட்டம் காணொலி உரையாடல் (Video confrence) மூலம் நடைபெறுமென்றும், பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிசிசிஐயின் ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:#onthisday: புற்றுநோயையும் பொருட்படுத்தாமல் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நாயகன் யுவராஜ்!