ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி நேற்றைய தினம் பிரிஸ்பேனுக்குச் சென்றது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள விடுதியில் முறையான, அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், "இந்திய வீரர்கள் தங்கியுள்ள விடுதியில் முறையான பராமரிப்பு மற்றும் அறை ஒதுக்கீடு இல்லை. அங்குள்ள உடற்பயிற்சி கூடங்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்லை. மேலும் நீச்சல் குளம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லை. வீரர்கள் விடுதிக்கு சென்ற போது இதுகுறித்து யாரும் கூறவில்லை.
இருப்பினும் அவர்கள் குழுவாக சந்திக்க ஒரு அறையும், விடுதிக்குள் வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்திப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் விளக்கம் கேட்டு முறையிட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறிய பிவி சிந்து, சாய் பிரனீத்!