ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியது.
ஆஸி மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதன்படி,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், ”ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் குறிப்பிடத்தக்க ஆற்றலும், ஆர்வமும் இப்போட்டியில் முழுவதும் தெரிந்தது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்! உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது பதிவில், ”வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றி. அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் கிடைத்துள்ளது. இந்த வெற்றியானது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும். இத்தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு ஐந்து கோடியை பிசிசிஐ வழங்கியுள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு தருணங்கள் இவை. அதனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி பிசிசிஐ சார்பில் வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.