இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் நடத்தப்படுகிறது. இதனிடையே பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளுக்காக அணியினர் தயாராகிவரும் சூழலில், புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை பிக் பாஷ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, போட்டியின் போது இரண்டு அணிகளுக்கும் தலா ஒன்றரை நிமிடங்கள் வரை strategic time out என்னும் இடைவேளை வழங்கப்படும். பேட்டிங் செய்யும் அணி ஏழு முதல் 13 ஓவர்களுக்குள் இந்த இடைவேளையை தேவைப்படும் சமயங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஓவர்கள் முடியும் சமயங்களில் இந்த இடைவேளைகளை எடுக்கலாம்.
மேலும் சூப்பர் ஓவர் முறையிலும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் இறுதிப்போட்டி உள்ளிட்ட நாக்-அவுட் போட்டிகள் டையில் முடியும் சமயத்தில் வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை சூப்பர் ஓவர் வீசப்படும். லீக் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சம அளவில் பிரித்து கொடுக்கப்படும்.