நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. பாக்ஸிங் டே நாளான இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது. குறிப்பாக, 19 ஓவர்களில் அந்த அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தன. இதையடுத்து, மேத்யூ கெலி வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட ஆல்ரவுண்டர் டாம் கரண் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 24 ரன்களைச் சேர்த்ததால், சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 174 ரன்களை எட்டியது.
டாம் கரண் 21 பந்துகளில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 43 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சிட்னி சிக்சர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், சிட்னி சிக்சர்ஸ் அணி இப்போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், சிட்னி சிக்சர்ஸ் அணி நடப்பு சீசனில் இரண்டாவது முறையாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 18ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திருந்தது. இப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில், ஜாக்சன் பேர்டு, சீன் அபோட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியில் பேட்டிங்கில் 43 ரன்கள் அடித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை எடுத்து சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டாம் கரண் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசன் வீரர்களுக்கான ஏலத்தில் ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிக் பேஷ் லீக்கை விட இத்தொடர் சிறந்தது - ரஸ்ஸல்