பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில், முன்னாள் சாம்பியன் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால், இப்போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி, தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலிப்பின் அதிரடியான ஆட்டத்தால் சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை எடுத்தது. 29 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் உட்பட ஜோஷ் ஃபிலிப் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 117 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இந்த தொடரில் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டோய்னிஸ் இன்று 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.