மழை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே கைவிடப்பட்டதை நாம் அறிந்திருப்போம். ஆனால், ஆஸ்திரேலியாவில் வழக்கத்திற்கு மாறாக காற்று மாசு, பனிப்புகை காரணமாக பிக் பாஷ் டி20 போட்டி ஒன்று பாதியிலேயே கைவிடப்பட்டது. நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் கான்பராவில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெற்றது.
அதேசமயம் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளான கான்பரா, சிட்னி உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது. இதனால், வீரர்கள் ரசிகர்கள் ஆகியோரின் நலன் கருதி மைதானத்தில் காற்றின் தரம் (Air Quality Index) கணக்கிடப்பட்டு திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஜொனதன் வேல்ஸ் 55, அலெக்ஸ் கெரி 45 ரன்கள் அடித்தனர். சிட்னி அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.