கிரிக்கெட் போட்டிகளின்போது நான் - ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், க்ரீஸை விட்டுச் சென்றால் அவர்களை 'மான்கட்' முறையில் பந்துவீச்சாளர்கள் அவுட் செய்யலாம். இந்த விதிமுறை நீண்ட நாள்களாக இருந்தாலும், கடந்த ஐபிஎல் சீசனின்போது அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லரை இவ்வாறு அவுட் செய்தபோதுதான் ரசிகர்களுக்கு மான்கட் விக்கெட் என்ற ஒன்று இருப்பதே தெரியவந்தது.
இதையடுத்து, சர்வதேசப் போட்டிகள், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலோ யார் மான்கட் செய்தாலும் அல்லது செய்ய முயற்சித்தாலோ அது சமூக வலைதளங்களில் செய்தியாவும் மீம்ஸாகவும் மாறுவது வழக்கமாகிவிட்டது.
அந்த வரிசையில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் டி20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக மோரிஸ் விளையாடிவருகிறார். இந்நிலையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சிட்னியிலுள்ள ஷோகிராண்ட் (Showground) மைதானத்தில் நடைபெற்றது.