வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, மூன்று ஒருநாள், இரண்டு டி20, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் சவர் மாநிலத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக கெவின் கசுஸா இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மற்றோரு தொடக்க வீரரான பிரின்ஸ் மஸ்வாரேவுடன் ஜோடி சேர்ந்த கிரேக் எர்வின், வங்கதேச அணியின் பந்துவீச்சை பதம்பார்க்கத் தொடங்கினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மஸ்வரே, 64 ரன்கள் அடித்திருந்த நிலையில் நயீம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரரான பிரண்டன் டெய்லரும் 10 ரன்களில் வெளியேற, ஆட்டம் வங்கதேச அணியின் பக்கம் திரும்பியது.