இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகல் - இரவு போட்டியாக இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. பகலிரவு டெஸ்ட்டாக நடைபெறும் இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது என்பதும், இந்தியா முதன்முதலில் அதில் பங்கேற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்புமிக்க போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்த டெஸ்ட் போட்டியைக் காண நேரில் வருகை தந்திருந்தனர்.