இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். இதுதான் ஒரு கேப்டனின் முக்கிய வேலை.
ஒரு அணியில் கேப்டன் என்றுமே முக்கிய வீரராக இருக்கக்கூடாது. மற்ற 10 வீரர்கள் தான் முக்கிய வீரர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால், மற்ற பத்து பேரிடம் இருந்தும் கேப்டன் சிறந்த விளையாட்டை வெளிக்கொண்டு வரவேண்டும். அதைதான் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் செய்தேன். இந்திய அணிக்கு தலைமை தாங்கும்போதும் செய்கிறேன்.