வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மோர்டசா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் தமீம் இக்பால் ஒருமுனையில் நின்று விரைவாக ரன்கள் குவித்து வந்தார். விக்கெட் கீப்பர் ரஹீம் - தமீம் இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர்.
இதனிடையே தமீம் இக்பால் தனது 12ஆவது சதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 136 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்தது.
பின்னர் 323 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. அந்த அணியின் ரெஜிஸ் 2 ரன்களிலும், பிரன்டென் டெய்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் ஷான் வில்லியம்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் தினஷே - வெஸ்லி இணை ஸ்கோரை உயர்த்தியது.
அதனைத் தொடர்ந்து தினஷே 51 ரன்களிலும், வெஸ்லி 52 ரன்களிலும் சிக்கந்தர் ராசா 66 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 41.2 ஓவர்களில் 225 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 49 பந்துகளில் 98 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.
அப்போது டினொடெண்டா - டொனால்ட் இணை அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தது. இந்த இணை 43 பந்துகளில் 78 ரன்களை சேர்த்து அசத்தியது. இதனால் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 20 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டினொடெண்டா 34 ரன்களில் வெளியேற, ஸ்ட்ரைக்கிற்கு வந்த டொனால்ட் அடுத்தடுத்து இரு சிக்சர்களைப் பறக்கவிட்டார். கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை வர, 5ஆவது பந்தில் ரன்கள் எடுக்கப்படவில்லை. இதனால் சிக்சர் அடித்து ஜிம்பாப்வே அணி வெற்றிபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த பந்தில் 1 ரன் மட்டுமே சேர்க்க, வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த ஆட்டத்தில் 158 ரன்கள் எடுத்து வங்கதேச அணியின் வெற்றிக்கு உதவிய தமீம் இக்பால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.