ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92 ரன்கள், கேப்டன் ரஷித் கான் 51 ரன்கள் அடித்தனர். வங்கேதச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் வங்கதேச அணி, ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஷத்மான் இஸ்லாம் டக் அவுட் ஆனார். பின்னர், சவுமியா சர்கார் - லிதான் தாஸ் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில், சவுமியா சர்கார் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆப்கான் வீரர்கள் அவரைத் தொடர்ந்து, லிதான் தாஸ் 33 ரன்களில் ரஷித் கானின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதன்பின் வந்த கேப்டன் ஷகிப்-உல்-ஹசன் (11), முஷ்ஃபிகுர் ரஹிம் (0), மஹ்மதுல்லாஹ் (7) என சொற்ப ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினர். இதனிடையே, நிதானமாக விளையாடிய மோமினுல் ஹக் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் இறுதியில் வங்கதேச அணி 67 ஓவர்களின் முடிவில் 194 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் அந்த அணி 148 ரன்கள் பின் தங்கியுள்ளது. மொசடேக் ஹோசைன் 44 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 14 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அவர் அரைசதம், நான்கு விக்கெட் என ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார்.