வங்கதேச அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக இருப்பவர் ஷகிப்-அல்-ஹாசன். வங்கதேச டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டனான ஷாகிப் இதுவரை வங்கதேச அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 11 ஆயிரம் ரன்களையும் 500 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இவர் கடந்தாண்டு இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் வங்கதேச அணியில் விளையாடியபோதும் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கியபோதும் சூதாட்ட தரகர் ஒருவர் ஷகிப்பை அணுகியுள்ளார். எனினும் இது குறித்து ஷகிப், ஐசிசியின் ஊழல் தடுப்புக் குழுவிடம் புகார் தெரிவிக்காமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் ஷாகிப்பிடம் ஐசிசி நடத்திய விசாரணையில் சூதாட்ட இடைத்தரகர் தன்னை அணுகியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஷாகிப்-அல்-ஹாசன் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படுவதாக ஐசிசி அதிரடி அறிவிப்பை வெளிவிட்டது.
அந்த அறிவிப்பில் ஓராண்டு முழுவதுமாக தடை என்றும் எஞ்சியுள்ள 12 மாதங்களுக்கு இடைநீக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கதேச அணியில் ஷகிப்-அல்-ஹாசன் நிரந்தர தடை ஓராண்டு மட்டும் என்பதால் ஷாகிப் மீண்டும் அடுத்தாண்டு அக்டோபர் 29ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் களமிறங்க அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் விதிகளின்படி இதுபோன்ற சம்பவங்களை ஐசிசியின் கவனத்திற்கு வீரர்கள் கொண்டுவர வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய ஷாகிப் தவறியதால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷாகிப்-அல்-ஹாசனுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையால் அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார். இதனால் வங்கதேச டெஸ்ட் அணியை முஷ்பிக்குர் ரஹிம், டி20 அணியை மஹ்மதுல்லா ரியாத் மொசாடெக் ஆகியோர் வழிநடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக் காரணமாக ஷகிப் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.