வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கெனவே வங்கதேசம் அணி 2-0 என்ற கணக்கில், கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், தமிம் இக்பால் அதிரடியில் எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இப்போட்டியில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின் தொடர்ந்த ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்திய லிட்டன், தனது முதலாவது 150 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்தார். அவரைத் தொடர்ந்து தமிம் இக்பாலும் தனது பங்கிற்கு 12ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அதன்பின் 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிட்டன் தாஸ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மேலும் இப்போட்டியின் முதல் விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு தமிம் - லிட்டன் இணை 292 ரன்களை சேர்த்ததன் மூலம், வங்கதேச அணிக்காக பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர்.
சதமடித்து அசத்திய தமிம் இக்பால் இதனால் வங்கதேச அணி 43 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 322 ரன்களை சேர்த்தது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய தமிம் இக்பால் இறுதிவரை களத்திலிருந்து 128 ரன்களைச் சேர்த்தார். பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டினாஷே கமுன்ஹுகாம்வே (Tinashe Kamunhukamwe) 4 ரன்களிலும், பிராண்டன் டெய்லர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்ஸ் 30 ரன்களிலும், மதவெரே 42 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ஜிம்பாப்வே அணியின் தோல்வி உறுதியானது. இருப்பினும் அந்த அணியின் அனுபவ வீரரான ஷிக்கந்தர் ரஸா நிலைத்து ஆடி 61 ரன்களைச் சேர்த்தார்.
ஜிம்பாப்வே அணியின் ஷிகந்தர் ரஸா இதனால் ஜிம்பாப்வே அணி 37.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்கதேச அணி 123 ரன்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இருவரும் தொடர் நாயகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:நான் விதியை நம்புபவள்... இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி!