இது தொடர்பாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கிய பின்னர், அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
’ப்ளூவேல்’ விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் ப்ளூவேல் விளையாட்டை விட வீரியமானது என்பதால், நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு அதற்கு தடை விதிக்கவும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்கவும் வேண்டும்.